No icon

குடந்தை ஞானி

ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தைக்கு EU  கிறிஸ்தவர்கள் கோரிக்கை

மார்ச் 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று உக்ரைன் நாட்டில் 17வது நாளாக கடுமையான போர் இடம் பெற்று வரும் வேளை, இப்போருக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு, EU  எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளின் கிறிஸ்தவத் தலைவர்கள், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

இருளும், அச்சமும், நம்பிக்கையின்மையும் நிறைந்த போர்ச்சூழலில், அமைதியான ஒரு தீர்வைக் கொணர்வதற்கு, நம்பிக்கையான ஓர் அடையாளமாக, முதுபெரும்தந்தை கிரில் அவர்களை, கிறிஸ்தவர்கள் அனைவரும் நோக்குகின்றனர் என்றும், இந்தப் போரில் உக்ரைன் நாட்டோடு ரஷ்யா ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த, முதுபெரும்தந்தை கிரில் அவர்கள் உதவுமாறும் அத்தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு முதுபெரும்தந்தை கிரில் அவர்களை விண்ணப்பிக்கும் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள், உலக கிறிஸ்தவ சபைகள் (WCC) மன்றம் ஆகியவற்றோடு தாங்களும் இணைவதாக, மார்ச் 10 ஆம் தேதி வியாழனன்று, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும், அமைதிக்குப் பொதுவான சான்றுகளாய் விளங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஜெர்மன் ஆயர்கள், போருக்கு, மதம் சார்ந்த நியாயம் வழங்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்ரமித்து இருப்பதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஜெர்மன் ஆயர்கள், சொல்லற்கரிய துன்பங்களையும் சேதங்களையும் ஏற்படுத்திவரும் இப்போர், ஐரோப்பா மற்றும் உலகின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Comment